Sunday, February 15, 2009

பதில் இல்லாத கேள்வி


ஆதாரம் இல்லாத உலகம்.
அதில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் மனம்.
கிழ்வானம் சிவக்கும்;
மேல்வானம் கருக்கும்;
காலங்கள் ஓடிவிடும் கணம்.
அதில் உன் காம தேகங்கள் கூட கரைந்து விடும்.
எங்கிருந்து வந்தாய்?
ஏன் வந்தாய்?
என்ன செய்கிறாய்?
எங்கே போகிறாய்?
தெரியவில்லை உனக்கும் எனக்கும்.
கடவுள் என்பர் சிலர் காவி நிறத்துடன்.
கடமை என்பர் சிலர் கருப்பு நிறத்துடன்.
இருவரும் கலந்து நிற்பார் கல்லறை காட்டில்.
தாய் என்பர்; தந்தை என்பர்;
தாரம் என்பர்; என் தலைவர் என்பர்.
யாரும் வருவதில்லை உன்னோடு.
கானல் நீராய்தான் இங்கே உறவுகள்.
அதில் தாகம் தீர்க்க நினைக்கும் உன் நினைவுகள்.
கேட்டிருப்பாய் ஒரு பழைய பழமொழி.
" நாய்க்கு வேலை இல்லை; அதற்க்கு நிற்க நேரம் இல்லை" என்று.
வந்த வேலை தெரியாமல் , நிற்க நேரம் இல்லாமல் அலைகிறாய்.
சுற்றுகின்ற உலகில் நின்று கொண்டிருப்பதாய் நினைக்கும் பேதை மனிதா !!!
பசிக்கு சமைக்கிறாய் , உணர்ச்சிக்கு மணக்கிறாய்.
இந்த உண்மையை உள்ளம் ஏற்க மறுக்கும்.
உள்ளுர பயம் பிறக்கும்.
மனிதா !!! புரிந்து கொள்.
நீ ஒரு பதில் இல்லாத கேள்வி.
மூடுக்கி விடப்பட்ட பொம்மை.
முதலும் முடிவும் தெரியாத அகதி.

காதல் தோல்வி


எப்பொழுதும் நினைத்து கொண்டிருக்கிறேன் உன்னை,
மறக்க வேண்டும் என்று.

காதல் பக்தி

உன் வீட்டு மொட்டை

மாடியில் காய்ந்து கொண்டிருக்கும்

உன் தாவணியை,

நம் காதல் தேசத்தில்

நீ ஏற்றிய தேசிய கொடியாய் நினைத்து

காதல் வணக்கம் செலுத்துகிறேன்..

மூட நம்பிக்கை

நீ என் எதிரே

குறுக்கும் நெடுக்குமாய்

நடந்த பூனை நடையில்

எடுத்த காரியமெல்லாம்

நிறைவேறாமல் நின்றுவிட்டது

உன் நினைவில்.

அகழ்வாராய்ச்சி


குளத்தில் நீச்சல்லடிக்கையில்
உன் ஒற்றை கால் கொலுசு தொலைந்து விட்டதாய்
என்னிடம் முறையிட்டாய் ஒருநாள்.
குளத்தில் நீர் வற்றி யும்,
புதையுண்ட அந்த உலக அதிசியத்தை
இன்னமும் தேடி கொண்டிருக்கிறேன்
அகழ்வாராய்ச்சியாளனாய்.

Saturday, February 14, 2009

மீண்டும் ஒரு காதலர் தினம்...

"வேலை இல்லாதவருக்கு விடுமுறை தினம்" என்பது போல எனக்கு காதலர் தினம்.

எனக்கு காதலை பிடித்த அளவு பல காதலர்களை பிடிப்பதில்லை.
கடவுளை பிடித்த அளவு சாமியார்களை பிடிக்காதது போல.

நானும் இந்த சமுகத்தில் பிற காதலர்களை பார்த்திருக்கிறேன்.
நானும் காதலித்திருக்கிறேன். காதலித்து கொண்டிருக்கிறேன்.
காதலிக்கபட்டிருக்கிறேன். காதலிக்க பட்டுகொண்டிருக்கிறேன்.

ஆனால், இரு சக்கர வாகனத்தில் காதலனை குரங்கு போல் அப்பி கொண்டு தன் காதலை வெளி படுத்தும் காதலி.

வணிக வளாகங்களில் உதட்டை கடித்து கொண்டு, மிகவும் பெருமைக்குரிய இடமாய் தன் உடம்பில் அவள் கருதும் அந்த பாகங்களைத் தொட்டு தன் காதலை வெளி படுத்தும் காதலன்.

இவர்களை கண்டு, சில சமயம் பிறர் காதலை வெருத்திருக்கிறேன், ராம சேனா போல.
பின்பு பூசாரி மேல் கோபம் கொண்டு கடவுளை வெறுக்க கூடாது என்று தெளிவுட்றேன்.

என்னை பொறுத்த வரை அடக்கி வைக்கும் எதுவுமே, தன் வீரியத்தை பல மடங்கு பெருக்கும்.

அடக்கி வைத்த இதழ்கள் பூவாக மலரும்.
அடை காக்கப்படும் முட்டைகள் உயிராக வெளி வரும்.
அடக்கி வைத்த பாறைகள் எரிமலையாக வெடிக்கும்.
அடக்கி வைத்த காதல், கவிதையாக வெளி வரும்.
கவிதை மனிதனை மகாத்மாவாக்கும்.
மகாத்மா தன் காதலை கடவுள் ஆக்குவான்.

மன்னித்து விடுங்கள் நான் கிராமத்து காதலின் காதலன்.

Friday, February 6, 2009

கல்வெட்டாய் காதல்

மரணப் படுக்கையில் அந்த முதியவர்.

அப்பொழுதும் முனுமுனுத்துக் கொண்டிருந்தார்

சேர முடியாத தன் வாலிப காதலியின் பெயரை.

சுற்றி இருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்

" எப்பொழுதும் அவருக்கு தன் மூத்த மகளின் நினைப்புதான்" என்று.

சூரிய உ(இ)தயம்

பெண்ணே !!!
நீ ஆற்றில் மஞ்சள் குளிக்காதே;
அந்த நீர் கடலில் கலந்து;
சூரியனைக் கலைக்கிறது.
அங்கே பார்,
காமத்தில் எப்படி சிவந்துவிட்டது சூரியன்.

Thursday, February 5, 2009

வருவாயோ .....வாராயோ....

தெரியாத எண்ணில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பெல்லாம்;
மீண்டும் என் ஞாபகத்தில் நீ அழைப்பதாய் நினைக்க தோன்றும்.


வீட்டின் முன்பு கிடக்கும் அந்த அறிமுகமில்லாத செருப்பு;
என்னை தேடி நீ வந்துவிட்டதாய் நினைக்க தோன்றும்.


என் கனவினில் வந்த நமது திருமணம்;
நினைவிலும் நடந்து விடும் என நம்பிக்கையை கூட்டும்.


கண்மூடி நான் இருந்தால்,
கண்களில் நீருடன் என்னை நோக்கி நீ வருவதாய் பிரம்மை தோன்றும்.


உன்னிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறி,
நீ என்னிடம் இருந்து விலகிய தருணம் நினைத்தால்;
பிஞ்சில் வெம்பிய மாங்காய் வடுவாய் சுருங்கி விடும் என் இதயம்.


யார் சொன்னது " நான் காதலில் தோல்வி அடைந்தவன் " என்று.
காத்திருப்பேன் நான் இறக்கும் வரை.
இப்படியே நான் இறந்து விட்டால்;
அப்பொழுது எழுதிகொள்ளுங்கள் என் கல்லறையில்
"இவன் காதலில் தோல்வி அடைந்தவன் " என்று.

கடவுளும் பெண்ணும்

அடி பெண்ணே !!!
உனக்கும் கடவுளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.
கல்லறை அடைந்து கடவுளை காணலாம்.
உன் காதலை அடையாமல் நான் கல்லறை காணலாம்.

என் காதலின் தாயே!!!

பெளர்ணமி இரவில் வானம் பார்த்தால்;
நிலவுக்கு பதில் அங்கே உன் முகம்.
அமாவாசை இரவில் வானம் பார்த்தால்;
லட்ச்சகணக்காக உன் முகங்கள் நட்சத்திரங்களுக்கு பதிலாக.
உன் நினைவு சித்திரவதையால்,
நீருக்கடியில் கண்மூடி நான் இருந்தாலும்;
உன் கொலுசொலி செவிவழியே இதயம் பாய்கிறது.
முழித்து கொண்டிருந்தால் நீ என் உயிரை குடித்து விடுவாய்யென;
தூங்க சென்றால்,
நீ என் உயிருடனையே அமிழ்ந்து விடுகிறாய்.
மூன்று முறை கோயில் பிரகாரம் சுற்ற நினைத்த போதெல்லாம்;
தீடிரென குறுக்கிட்ட உன் நினைவு,
1003 ஆக முடித்து வைத்திருக்கிறது பலமுறை..

உன் நினைவெனும் உலகத்தில் தனியாளாக நான் உலாவி கொண்டிருந்தாலும்,
என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என்கிறது உலகம்.
இருந்தாலும் உன்னிடம்,
என் காதலை சொல்ல வந்த போதெல்லாம்;
என் தைரியம் கண்ணுகெட்டாத தூரம் போய்விடுகிறது.
நம் காதலில் கருவுற்று புதிதாய் பிறந்த குழந்தை நான்.
என் முகம் பார்த்தே எனது காதல்பசியை தீர்த்துவிடு
என் காதலின் தாயே!!!

மனசை பற்றிய நிலாரசிகனின் சிந்தனைகளும் அதற்கு எனது கருத்துரையும்

மனசை பற்றிய சில குறிப்புகளும்,கேள்விகளும்...
1.குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.
2.மனதிற்கு காயங்களை தந்துவிட்டு கண்ணீரை மட்டும் சிந்துகிறது விழிகள்.
3.உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?
4.ரசனைகளை நசுக்கும் கால்களின் பாதைகளிலும் பூக்கள் மலரவே வாழ்த்துகிற மனசை என்னசொல்லி திட்டுவது?
5.தவிர்த்தலை பரிசளிக்கும் இதயங்களை மறக்கும் மனசு எங்கே கிடைக்கும்?6.ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த வலி மறக்க தேவை மனமா,பணமா?7.உடைந்த கண்ணாடியில் ஓராயிரம் பிம்பங்கள். உடைந்த மனசில் ஒரே ஒரு பிம்பம்.
- நன்றி : நிலாரசிகன்

மேற்கண்ட நிலாரசிகனின் சிந்தனைக்கு எனது கருத்துரை கிழே: மனம் ஒரு கடவுள் !!!
பாம்பின் விஷத்திஇற்கு முறிவு பாம்பின் விஷமே!!!
காயங்களை ஏற்படுத்துவதும், அதற்க்கு மருந்திடுவதும் மனமே !!
மனம் என்ற ஒன்று இல்லாவிடில் இங்கே கவிஞன் இல்லை; காதல் இல்லை; காவியம் இல்லை; நீங்கள் இல்லை; நான் இல்லை.
தொட்டிலையும் கிள்ளிவிட்டு ; பிள்ளையையும் ஆட்டிவிடுவதே மனம்.
மனம் என் காதலி; காயபடுத்துவதும் அவளே!! சந்தோஷ படுத்துவதும் அவளே !!
எங்கும் நிறைந்திருந்தும் கண்ணால் காணமுடியாத கடவுளை போல;
என் உடல் எங்கும் நிறைந்திருந்து, கண்ணால் காண முடியாத மனமே!!
நீயும் கடவுள்தான் !!