Sunday, May 27, 2012

வாழ்க்கை என்னும் பேருந்து

எங்கள் தாத்தாவிடம் ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை எங்கள் ஊரில். எங்கள் மரியாதை மிக்க மாமாவின் எதிரே நாங்கள் உட்கார்ந்து பேசியதில்லை. எனது பெரியம்மாவின் மீது உள்ள பாசத்தால் கல்யாணமே வேண்டாம் என்றான் என் பங்காளி. தனது மூத்த பிள்ளை மீது உள்ள பாசத்தால் இன்னொரு பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை என் நண்பன். மனைவின் முகம் பார்த்தே தினமும் காலையில் எழுவார் என் சித்தப்பா. இத்துணை முக்கியத்துவமான நபர்கள் இன்று இந்த மண்ணில் இல்லை. ஆனால் எதுவும் நின்று போய்விடவில்லை; யாரும் உடைந்து போய்விடவில்லை. நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு இயல்பாக பயணிக்கிறது வாழ்க்கை என்னும் பேருந்து. ஒரே பேருந்தில் பயணித்தாலும், அனைவரது இறங்கும் இடமும் ஒன்றல்ல. இறங்கும் இடம் சொல்லி பயண சீட்டை வாங்குவதில்லை பயணிகள் பயணிகள் இறங்கும் இடத்தை நடத்துனரே தீர்மானிக்கிறார் இந்த பேருந்தில். பேருந்தின் வேகத்தை ஒட்டுனரே தீர்மானிக்கிறார். இதில் தனது பேருந்து வேகமாய் செல்வதாய் சில பயணிகளுக்கு மகிழ்ச்சி. மேலும் சிலர், தனது இருக்கையை விலை பேசுகிறார். இன்னமும் சிலர் பேருந்தை முழுவதும் விலை பேசுகிறார். பாவம் அவர்களுக்கு தெரியாது அடுத்த நிறுத்தம் அவர்கள் இறங்கும் இடம் என்று.