Friday, February 19, 2010

ஈன்ற பொழுதினும் பெரிது வலிக்கும்

அம்மாவுக்கு சீரியஸ் என செய்தி கேட்டு
அவசர விடுமுறையில் வந்த அவளது ஒரேமகன்
உயிர் இழுத்துக்கொண்டு இருப்பதில் கவலையுற்று
இறுதி சடங்கிற்கான செலவை சொந்தகாரகளிடம் கொடுத்து விட்டு
அவசரமாய் பறந்து கொண்டு இருக்கிறான் அந்நிய தேசத்திற்க்கு.

மனசாட்சி

குறையுடன் பிறந்து
சுகமில்லாமல் இருக்கும்
அவன் குழந்தையை
கொன்றுவிடலாம் என்று
பலர் ௬றி அவன் மறுத்தபோதிலும்
தானாகவே இறந்துவிடாத
என்று உள்ளுர அவன் மனம் ஏங்குகிறது
கண்ணீருடன்.

சட்டமா ? பாசமா ?

நோயின் உச்சத்தில்
குற்றுயிருமாய், குறையுயிருமாய்
நாறி கொண்டிருக்கும் தன் தாய்க்கு
தூக்க மாத்திரை கரைத்து
நிரந்தரமாய் தூங்க செய்துகொண்டு இருக்கிறான்
அவளை உணர்ந்த பாசக்கார குற்றவாளி மகன்.

Tuesday, February 16, 2010

அதே வீட்டில் தான் நீயும் நானும்


நான் ருதுவாகியவுடன் முதன் முதல் பார்த்து வெட்கப்பட்ட ஆண் மகன் நீ தான். சிறுவயதில் நமது வீட்டு மொட்டை மாடியில் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் பொழுதெல்லாம் "அப்பா" நீதான். அன்று தேங்காய் சிரட்டையில் ரசம் வைத்து, சாதம் சமைத்து உனக்களித்த இந்த மஞ்சுதான் இன்றுவரை உனக்கு உணவு சமைத்து தருகிறாள் அவளது உயிரையும் அதில் கலந்து. உன்னை என் வாழ்க்கையில் எப்படி பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே இன்று நீ.
உனது வான கலர் ஜீன்ஸ் பேண்டை உன்னை கேட்காமல் நானே எடுத்து துவைத்த போதெல்லாம் எனது தலை வீங்கும் அளவுக்கு குட்டி விட்டு என்னிடம் தஹறாரு செய்வாய் எப்பொழுதும். இதுவரை ஜீன்ஸில் பார்த்த உன்னை, இப்பொழுது வேஷ்டி, சட்டையில் பார்ப்பது புதிதாகதான் உள்ளது. அழகாகவும் உள்ளது.
அதே சென்ட்டைதான் இப்பொழுதும் தெளித்திருக்கிறாய் உனது சட்டையில். ஆனால் உனது கழுத்தில் உள்ள மாலையின் மனமும் சேர்ந்து கொண்டது இப்பொழுது.
தெரியும்மா!! ஒவ்வொரு முறையும் உனது சட்டையை துவைக்கும் முன்பு அதனுடன் சிறிது நேரம் வாழ்ந்துவிட்டு தான் எனது ஆசையையும், உணர்வையும் உனது சட்டையுடன் சேர்த்து நீரில் அமிழ்த்தியிருக்கிறேன் . உனது உடல் வாசமும் உடை வாசமும் என் நெஞ்சுக்குள் எப்பொழுதும் வசித்து வரும். நீ பத்தாம் வகுப்பில் கணக்கு தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கிய பொழுது என்னை கட்டிபிடித்து உன் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறாய். இன்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்தவுடன் எனது கையை பற்றி மகிழ்ச்சியை வெளிபடுத்திருக்கிறாய். இன்று மணவறையில் மண உடையில் உனது கண்களினால் மகிழ்ச்சியை என்னிடம் வெளிபடுத்துகிறாய்.
அன்று மொட்டை மாடியில் நாம் கல்யாண விளையாட்டு விளையாடும் பொழுது நம்மை சுற்றி இவ்வளவு ௬ட்டம் இல்லை. இப்பொழுது ௬ட்டம் அதிகம் அவ்வளவுதான். நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் நாம் கல்யாண விளையாட்டு விளையாடுவதில் ஏனோ என் மனம் துள்ளுகிறது. அன்று நீ சிவப்பு கலர் சட்டை போட்டிருந்தாய், தோள்களில் மாலை இல்லை. இப்பொழுது பட்டு சட்டையுடன் தோள்களில் மாலையுடன் நீ. பட்டு புடவை, தலை நிறைய பூவுமாய் நான். மணமகன் நீ. மணமகள் நான். ஆனால் நமது திருமணதிற்கு உற்றார் உறவினர்கள் ௬ட்டம் தான் இல்லை. இங்கு ௬டியுள்ள ௬ட்டம் எல்லாம் உனது திருமணதிற்கு வந்தவர்கள். நமது திருமணதிற்கு அல்ல. ஆனாலும் மணமகன் நீ. மணமகள் நான். உன் மனைவியாக போகிறவள் தான் வேறு.
நமது கல்யாண விளையாட்டை என்றோ நீ விளையாடி முடித்து விட்டாய் . இன்னமும் நான் அதை தொடர்ந்து உன்னிடம் விளையாடி கொண்டிருக்கிறேன்.

" ஏடி மஞ்சு !!! சும்மா மணமேடைகிட்டே நின்னுகிட்டு அவனேயே பார்த்துகிட்டு இருக்காதே. போயி மணமகளை பாரு. "

" சரிம்மா "

" யாருக்கா அந்த பொண்ணு. நல்ல அழகா இருக்கு".

" யாரு மஞ்சனத்தியா ... சின்ன வயசில இருந்தே எங்க வீட்ல வேலை பார்க்குது. அம்மா அப்பா கிடையாது."

மஞ்சு வேகமாய் மணமகள் அறையை நோக்கி ஓடினாள் மகிழ்ச்சியுடன்.

" ஏண்டி மஞ்சு .. நீ என்ன லூசா ? உன் ரத்தத்தில் அவன் உணர்வை கரைச்சி, உன் உயிரில் அவன் உயிரை புதைச்சி வாழ்ந்துகிட்டு இருக்க. இப்போ அவன் கல்யாணம் கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா உனக்கு. "

மஞ்சுக்கு மஞ்சுவே இந்த கேள்வியை கேட்டு கொண்டாள். பதிலும் அவளே.

“அது அவுக கல்யாணம். என் கல்யாணம்தான் அவன் கூட சின்ன வயசில் இருந்தே நடந்துகிட்டு தான் இருக்கே. இருபது வருஷமா அவன் வீட்டில்தான் நானும் அவனும் வாழ்ந்துகிட்டு இருக்கோம். கூட அவன் அம்மாவும் இருந்தாக. இன்னமும் நானும் அவனும் அதே வீட்டில்தான் வாழபோகிறோம் இப்போ கூட அவன் மனைவியும் இருக்காக. அவ்வளவுதான்.
-----------

தூக்கிவிட ஆள் இருந்தால், விழுந்த இடத்திலேயே படுத்து அழலாம்;
ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் அழுது கொண்டே இருக்கலாம்;
அக்கறை காட்ட ஆள் இல்லாத உலகத்தில்;
கண்ணீர் துடைக்க கைகள் இல்லாத தருணத்தில்;
கற்பனையை கொண்டுதான் கண்களை துடைத்து கொள்ள வேண்டும்.
இந்த மஞ்சனத்தியை போல.

-------